முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

மௌலவி அலி அக்பர் உமரி
அக்ரபியா தஃவா நிலையம், சவூதி அரேபியா

இன்றைய கால கட்டத்தில் பெண்கள், நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம்.

கணவனிடம் நடந்து கொள்ளும் முறை:

1.கணவனுக்கு கட்டுப்படுதல்:

எந்தப் பெண் தன் கணவன் இல்லாத சமயத்தில் எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்து, கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றாளோ அவளே ‘ஸாலிஹான பெண்’ என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:34)

ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் எந்த பெண் சிறந்த பெண்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவன் பார்க்கும் போது அவனை சந்தோஷப்படுத்துகிறாளோ அவளே சிறந்தவள் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ)

2.கஷ்டத்திலும் கணவனுக்கு உதவி செய்தல்:

நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை 600 இறக்கைகளை கொண்டவர்களாக வானத்தையும் பூமியையும் நிரப்பியவர்களாக கண்ட பொழுது மிகவும் பயந்தவராய் தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் ஓடி வந்து ‘என்னை போர்த்துங்கள், என்னை போர்த்துங்கள்’ என்று கூறினார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை போர்த்தி ஆசுவாசப்படுத்திய பின் நடந்ததை விபரமாக கேட்டு பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உங்களை ஒரு போதும் கேவலப்படுத்த மாட்டான். ஏனென்றால் நீங்கள் சொந்தங்களை அனுசரித்து, மக்களின் கஷ்டங்களை சுமந்து, ஏழை எளியோருக்கு உதவி செய்து விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள்’ என்று ஆறுதல் கூறினார்கள். (நூல்: புகாரி)

3.கணவனுக்கு பணிவிடை செய்தல்:

நபி (ஸல்) அவர்கள் சத்தியத்தை தேடி ஹிரா குகை சென்ற பொழுது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 55. அந்த வயதிலும் அவர்கள் பல மைல் தூரம் கரடு முரடான பாதையில் உணவுப் பொருளை சுமந்து நடந்து சென்று தன் கணவனுக்கு பணிவிடை செய்தார்கள். (நூல்: புஹாரி)

4.இல்லறத்தில் கணவனை திருப்திபடுத்துதல்:

நீங்கள் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தாலும் அல்லது போருக்கு செல்வதற்காக குதிரையின் மீது இருந்தாலும் கணவன் இல்லறத்திற்காக அழைத்தால் அவனை சந்தோஷப்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5.ரகசியம் காத்தல்:

கணவன் ரகசிய உள்பட எல்லாவிதமான ரகசியங்களையும் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் ரகசியம்; என்பது அமானிதம். அமானிதத்தைப் பேணுவது உண்மை முஸ்லிமின் பண்பு. அமானித மோசடி செய்வது முனாஃபிக்கின் அடையாளம்.

விருந்தோம்பல்:

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறார்களோ அவர்கள் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி)

ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு விருந்தாளி வர நபி (ஸல்) அவர்கள் இவருக்கு யார் விருந்தளிப்பது என்று கேட்டார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் தான் அளிப்பதாக கூறி அந்த விருந்தாளியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் மனைவியிடம் ‘நபி (ஸல்) அவர்களின் விருந்தாளியை கண்ணியப்படுத்து’ என்று கூறினார்கள். உடனே மனைவி உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், ‘குழந்தைகள் உண்ணும் உணவைத் தவிர வேறு எதுவும் நம்மிடம் இல்லையே’ என்று சொல்ல, அதற்கு கணவர் அபூதல்ஹா (ரலி) அவர்கள், குழந்தைகளை பசியோடு தூங்க வைத்து விட்டு உணவை எங்களுக்கு வைத்து விட்டு விளக்கை ஏற்றுவது போல் அணைத்து விடு. விருந்தாளி நானும் உண்பதாக நினைத்துக் கொண்டு வயிறார உண்ணுவார், நான் உண்ணுவது போல் நடித்துக் கொள்வேன் என்று சொல்ல, அதற்கு கட்டுப்பட்டு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மறுநாள் காலை ஸுப்ஹு தொழுகைக்கு சென்ற அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் இருவரின் விருந்தோம்பலை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான், மேலும் சந்தோஷத்தில் சிரித்தான் என்றார்கள்.

அப்போது அல்லாஹ் ‘அவர்கள் தங்களுக்கு தேவையிருந்தும் பிறருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்’ (அல்குர்ஆன் 59:9) என்ற வசனத்தை இறக்கியருளினான்.

இஸ்லாத்திற்காக தியாகம் செய்தல்:

ஒருமுறை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் தன் மனைவியுடன் மக்காவில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு வயதான பெண்மணி உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் நான் உனக்கு பால் கொடுத்த தாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவருடைய மனைவியைப் பார்த்து இவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் தன் மனைவி என்று கூறவும் இவருக்கும் நான் பால் கொடுத்துள்ளேன். இருவரும் சகோதர சகோதரி முறையல்லவா? நீங்கள் எப்படி கணவன் மனைவியாக வாழலாம்? என்றார்கள். உடனே உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் மதீனா சென்று நபி (ஸல்) அவர்களிடம் விஷயத்தை கூறி மார்க்க தீர்ப்பு கேட்க, நபி (ஸல்) அவர்களும் இந்த திருமணம் செல்லாது, எனவே உறவை முறித்துக் கொள்ளுங்கள் என்று கூற, அவர் தன் மனைவியிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி அல்லாஹ்வுக்காக பிரிந்து விடுவோம் என்றார். அன்பாக, ஒற்றுமையாக அவர்கள் அல்லாஹ்வுக்காக தன் திருமண உறவை முறித்துக் கொண்டார்கள். (புஹாரி)

குர்ஆன், ஹதீஸிற்கு முழுமையாக கட்டுப்படுதல்:

எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப்பட வேண்டும்.

யார் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டாரோ அவர் நாளை மறுமையில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள், நல்லோர்களோடு சொர்க்கத்தில் தங்குவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:69)

தர்மம் செய்தல்:

‘யார் ஏழ்மையிலும் வசதியிலும் தர்மம் செய்கிறாரோ அவர் சொர்க்கவாசி ஆவார்’ என்று அல்லாஹ் கூறுகிறான் (அல்குர்ஆன் 3:134)

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் உரையின் போது பெண்களே உங்களை நான் நரகத்தில் அதிகமாக கண்டேன். எனவே அதிகமாக தர்மம் செய்யுங்கள். தர்மத்தின் மூலமாக உங்களை நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் அணிந்திருக்கும் அணிகலன்களாக இருந்தாலும் சரியே என்று கூறினார்கள்.

அதைக் கேட்ட சஹாபிய பெண்கள் தங்களின் காதுகளிலிருந்தும் கைகளிலிருந்தும் அணிகலன்களை கழற்றி தர்மம் செய்தார்கள். (புஹாரி)

உண்மை பேசுதல்:

உம்மு ஸலமா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்டார்கள். அதற்கு அவர்கள் தன்னிடம் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தான் ஒரு முன்கோபக்காரி என்று உண்மையை எடுத்துக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய முன்கோபம் போக நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்று கூறி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதிலிருந்து எந்த சூழ்நிலையிலும் உண்மை பேச வேண்டும் என்பதும், ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது தவறு என்பதும் புலனாகிறது.

மார்க்கத்தை அதிகமாக கற்றுக் கொள்ளுதல்:

சஹாபிய பெண்கள் அதிகமாக மார்க்கத்தை கற்றுக் கொள்வார்கள். ஒருமுறை சஹாபிய பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘யா ரஸுலுல்லாஹ் சஹாபாக்கள் எப்போதும் உங்களுடன் இருந்து மார்க்கத்தை கற்றுக் கொள்கிறார்கள். எனவே எங்களுக்காக ஒரு நாளை ஒதுக்கி கற்றுத் தாருங்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) வியாழக்கிழமையை உங்களுக்கு ஆக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

பணம் வந்தாலும் தன்னடக்கத்தோடு வாழுதல்:

கதீஜா (ரலி), அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) போன்ற சஹாபிய பெண்மணிகள் பணம் இருந்தும் தன்னடக்கமாக, எளிமையாக வாழ்ந்தார்கள். அவர்கள் பணத்தைக் கொண்டு பெருமையடிக்கவில்லை. ஆணவம் கொள்ளவில்லை. ஏனெனில் ‘யாருடைய இதயத்தில் கடுகளவும் பெருமை இருக்கிறதோ அவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

குழந்தை வளர்ப்பு:

குழந்தைகளை ஒழுக்கத்தோடும், இஸ்லாமிய பண்பாட்டோடும் வளர்ப்பது பெற்றோர்களது கட்டாய கடமை. குழந்தைகள் தந்தையை விட தாயிடம் நெருக்கமாக இருப்பதால் தாய் மீது இந்த பொறுப்பு அதிகமாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறெல்லாம் எந்தப் பெண் நடந்து கொள்கிறாளோ அவளே உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் ஆவாள்.

ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் மேற்கண்ட முன்மாதிரி முஸ்லிம் பெண்ணாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s